நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 14 ஜூன், 2015

சில்லறைகள் தேசத்தில்...!பூக்காடு போல்நெஞ்சம் பொலிந்தாலும் விதியென்னும்
ஏக்கத்தில் வீழும்நாள் எல்லோர்க்கும் பொதுவாகும்
ஆக்கங்கள் ஆயிரமாய் அவனியிலே படைத்தாலும்
தாக்கங்கள் இல்லாமல் தந்துவிட முடியாது !


நல்லவரின் கைகளுக்கும் நாட்டமிது என்பதனால்
சில்லறைகள் அச்சிடுதல் சீக்கிரத்தில் நிறுத்துங்கள்
கல்லறைக்கு போகின்ற கடைசிநொடி என்றாலும்
பொல்லாத பணத்தாளை  போடட்டும் பிச்சைக்கும்    !

ஒப்பாரிப் பாடலுக்கும் உசார்த்துணைகள்  தேடுகின்ற
அப்பாவி  நகர்மக்கள்  அறியாத  தெல்லாமே
எப்பாடும் படுகின்ற ஏர்பிடிக்கும் உழவனுக்குள்
முப்பாலாய் சேர்ந்திருக்கும் மூச்சோடு மறைந்திருக்கும் !

சிந்திப்போர் சிறைபோகும் சில்லறைகள்  தேசமிதில்
மந்திகளும் அரசாளும் மரங்கொத்தி அமைச்சாகும்
மந்தாரக்  கூட்டத்தில் மறைந்திருக்கும்  நீர்த்துளியாய்
சொந்தத்துள் நஞ்சூட்டிச் சுகங்காணும் பேராசை !

அந்தகனின் ஆசைக்காய் அழியாமல் அருச்சுனனை
குந்தியவள் குலங்காத்த  கோகுலத்துக் கண்ணனவன்
மந்திரமாய் எமக்களித்த மறைநூலாம் கீதைதனை
சிந்தையிலே கொண்டிருந்தால் செழித்திடுமே வையகமும்  !

பிரியமுடன் சீராளன்

26 கருத்துகள்:

 1. ''...மறைநூலாம் கீதைதனை
  சிந்தையிலே கொண்டிருந்தால் செழித்திடுமே வையகமும் !...''

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கோவைக்கவி !

   வையம் செழிக்க வடித்திட்ட கீதை..படி
   ஐயம் தெளியும் அகத்து !

   தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

   நீக்கு
  2. சிந்திப்போரும் சிறையாகும் அரசாளும் கூட்டம் இங்கு - அருமை

   நீக்கு
 2. கவிஞரே நலம் தானா
  கீதையினைக் கற்ரொழுகல் அவசியம் என்பதை அழகாக கூறிவிட்டீர் கவியில் மகிழ்ச்சியே மேலும் பல கவிதைகள் தர வேண்டும் இது போன்று கவியில் தரும் கருத்துக்கள் அனைத்தும் என்றும் பயனுள்ளவை அனைவருக்கும் வாழ்த்துகிறேன் கவிஞரே !

  கீதையின் சாரமதை சிந்தையில் கொண்டென்றும்
  பாதையினை வகுத்தாலே பாவமில்லை மதிமயங்கி
  போதையிலே நாம்கிடக்க பழிசூழும் மேலுமெமை
  வாதைதான் வரும்வாழ்வின் எல்லைவரை வழியனுப்ப!

  நாடாளும் மன்னனுக்கு நற்குணங்கள் நல்கிடவும்
  கூடாத எண்ணமதை கொளுத்திடவும் - வாடாமல்
  பாடினனோ வண்ணனவன் பாரெல்லாம் செழித்திடவே
  தேடினனோ திவ்ய மதை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ இனியா !

   தேடிடும் திவ்வியம் தீந்தமிழ் என்பதால்
   பாடிடத் தோணுதே பாவெல்லாம் - நாடிய
   செல்வமாய் நான்மறை சொந்தமாய் ! நாவுள்ளே
   வெல்லச் சுவையில் விளைந்து !

   தங்கள் வரவுக்கும் இனிய வெண்பா கருத்துக்கும் மிக்க நன்றிகள்
   வாழ்க வளமுடன்

   நீக்கு
 3. அருமை கவிஞரே அழகிய வரிகள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கில்லர்ஜி !

   அழகு வரிகளில் அந்தமிழ் நெய்வேன்
   குழந்தை மொழியாய்க் கொடுத்து !

   தங்கள் வரவுக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றிகள்
   வாழ்க வளமுடன்

   நீக்கு
 4. இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இளங்கோ அடிகள் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும் என செப்பி இருப்பாரோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாலதி !

   இளங்கோ மொழிந்த இனிய கவியும்
   வளமை கொடுக்கும் வரிந்து !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

   நீக்கு

 5. "நல்லவரின் கைகளுக்கும் நாட்டமிது என்பதனால்
  சில்லறைகள் அச்சிடுதல் சீக்கிரத்தில் நிறுத்துங்கள்
  கல்லறைக்கு போகின்ற கடைசிநொடி என்றாலும்
  பொல்லாத பணத்தாளை போடட்டும் பிச்சைக்கும்!" என்று
  நம்மாளுங்க சிந்திக்க வைத்துவிட்டு
  அடுத்து
  "அந்தகனின் ஆசைக்காய் அழியாமல் அருச்சுனனை
  குந்தியவள் குலங்காத்த கோகுலத்துக் கண்ணனவன்
  மந்திரமாய் எமக்களித்த மறைநூலாம் கீதைதனை
  சிந்தையிலே கொண்டிருந்தால் செழித்திடுமே வையகமும்!" என்று
  சிறப்பாக வழிகாட்டுவது
  அருமையான படைப்பு என்பேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் !

   அருமைப் படைப்பில் அறிதலை நெய்வேன்
   பெருமைகள் கொண்டிடப் பேறு !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம் !

   அழகுக் கவிதையில் அள்ளிக் கொடுப்பேன்
   பழந்தமிழ் காட்டும் பயன் !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

   நீக்கு
 7. மிகவும் அழகான அருமையான கவிதை.

  எனது வலைப்பூவுக்கும் உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. உறுப்பினராக சேர்ந்து தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்ல வாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் !

   விந்தை உலகுதனை வெல்லும் கலசமாய்
   சிந்தை இருத்தல் சிறப்பு !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் கண்டிப்பாக வருகிறேன் நன்றி

   நீக்கு
 8. நாட்டின் கதைசொல்லும் நற்கருத்(து) உம்கவிதை
  கேட்டின் புறட்டுந் தமிழ்.

  அருமை இனிமை கவிஞரே!

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பாவலரே !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

   நீக்கு
 9. கவிஞரே தங்களின் இந்த தளம் நான் இதுவரைப் பார்த்ததில்லை,
  வலைச்சரம் பார்த்து வந்தேன்.
  அருமையான கவிதை வரிகள்,
  ஆனால் குந்திதேவியின் வரிகள்,,,,,,,,,,,,,,
  கர்னன் அவள் மகன் அல்லவா?
  இனி தொடர்கிறேன், தொடருங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பேராசிரியரே !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் !

   //கவிஞரே தங்களின் இந்த தளம் நான் இதுவரைப் பார்த்ததில்லை, //
   என்னது இந்த தளத்தை இதுவரை பார்க்கலையா அப்போ '' சிந்திப்போமா '' என்னும் கவிதைக்குக் கருத்திட்டது யாருங்கோ ....?

   //ஆனால் குந்திதேவியின் வரிகள்,,,,,,,,,,,,,,
   கர்னன் அவள் மகன் அல்லவா? //

   இங்கு கர்ணன் பற்றிக் குறிப்பிடவில்லையே '' அந்தகன் என்று குறிப்பிட்டேன் அது உயிர் எடுக்கும் இயமனையும் குருடனான துரியோதனன் தந்தை திருதராட்டினனையும் குறிப்பிட்டேன்

   '' அந்தகனின் ஆசைக்காய் அழியாமல் அருச்சுனனை ''
   இங்கே இயமனின் ஆசையும் திருதராட்டினன் ஆசையும் நிறைவேறாமல் செய்த கண்ணனின் லீலைகளையும் அவன் தந்த கீதாசாரமும் தான் என் பாடலின் பொருளாகின்றன
   நன்றி

   தொடர்வதற்கும் மிக நன்றிகள்

   நீக்கு
  2. கவிஞரே வணக்கம், நான் பெயரும் வலையும் மாற்றியதால் வந்த மறதி,,,,,,,,,,,,
   அதற்காக வருந்துகிறேன்,
   நான் சொன்னது,
   குந்தியவள் குலம் காத்தவன் என்றால்,
   கர்னனை ஏன் இப்படி விட்டான் என்று,,,,,,,,,,,
   அவனும் அவள் குலம் தானே,,,,,,,,,,,,,,,,
   தங்கள் பாடலின் பொருள் தான் என் கேள்வி, நன்றிங்க கவிஞரே,

   நீக்கு
  3. என்னுயிரே என்று ஒரு தளம் ,,,

   நீக்கு
  4. வணக்கம் பேராசிரியரே !

   எல்லாம் அறிந்த கண்ணனுக்குக் கர்ணனனையும் காப்பாற்ற முடியாமல் போய் இருக்குமா ..? கடைசியில்
   கர்ணன் உயிர் துறப்பதும் கண்ணனின் ஆசைக்கு இணங்கித்தானே ..! எந்தளவு பார்த்தீபனைப் பிடிக்குமோ அதற்கும் மேலாய்க் கர்ணனைப் எனக்குப் பிடிக்கும் !

   // என்னுயிரே என்று ஒரு தளம் /// ஆம் அது என்னுயிரின் தளம் ,,,


   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி பேராசிரியரே வாழ்க வளமுடன் !

   நீக்கு
 10. முதலில் வருகிறேன்.அருமையான படைப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா !

   தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கம் தர வேண்டுகிறேன் நன்றி !

   வாழ்க வளமுடன்

   நீக்கு
 11. அருமையான படைப்பு சகோதரா! தமிழ் உங்கள் கவியில் அழகாக நர்த்தனம் ஆடுகிறது... பகிர்வுக்கு நன்றி! தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ !
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
   வாழ்க வளமுடன் !

   நீக்கு