நேரிசை வெள்ளொத்தாழிசை !
தாய்மொழிச் சிறப்பு !
நாவாரப் பாடும் நறுந்தமிழே ! நற்குரவர்
தேவாரப் பாட்டின் திருத்தமிழே - கோவாத
பூவாரம் ஆவாய் பொலிந்து !
நற்றுணை ஆகும் நறுந்தமிழே ! நற்குரவர்
சொற்றுணை ஆகும் சுடர்தமிழே - பற்றுடனே
பொற்றுணை ஆவாய் பொலிந்து !
நன்னெறி ஊட்டும் நறுந்தமிழே ! நற்குரவர்
தன்னெறி காட்டும் தனித்தமிழே - மன்பதையின்
பொன்னெறி ஆவாய் பொலிந்து !
இன்னிசை வெள்ளொத்தாழிசை!
மானிடம் காப்போம் !
வண்ணக் கனவுகளில் வாழும் மனிதர்களின்
எண்ணக் குவளைகளில் ஏந்தும் பகையழிய
பண்ணைக் கொடுப்போம் பணிந்து !
வல்லார் அடிமைகளாய் வாழும் மனிதர்களின்
சொல்லாத் துயர்களையத் தோகை மனம்விரித்துப்
பல்லாண் டணைப்போம் பணிந்து !
வாசம் மதுவென்று வாழும் மனிதர்களின்
வேசம் களைந்தெறியும் வேட்கை தருவித்துப்
பாசம் கொடுப்போம் பணிந்து !
பாவலர் வீ.சீராளன்
வணக்கம் பாவலரே தலைப்பே அசத்தலாக இருக்கிறது.
பதிலளிநீக்குரசித்து படித்தேன் கவிதை வரிகளை...
மிக்க நன்றி ஜி வாழ்க நலம்
நீக்குஅக்கினியில் சுவடு பதிக்க இடைவெளி அதிகமாகி விட்டதே...
பதிலளிநீக்குதொடர்ந்து கவிச்சுவை அளித்திடுங்கள் நண்பரே...
வணக்கம் ஜி !
நீக்குகிடைக்கும் நேரங்களில் எல்லாம் இனிக் கவி தர விளைகிறேன் ஜி அன்புக்கு நன்றி