கங்குலெழக் காற்றசையக் கார்மழையும் கொட்டக்
காட்டுநரி ஊழையிலே கானமயில் ஒடத்
தொங்குவான ரங்குமடி தொட்டுவளர் குட்டி
தூக்கியெடுத் தோடுகின்ற காட்சியிடை ! அந்தோ !
எங்குமெழில் தந்தவொளித் தாரகைகள் வானை
இட்டுநெடு தூரமதாய் ஏகியிருள் சூழ !
பொங்குநுரை தீண்டமணற் புட்களிடம் மாறும்.
போருதவி இன்றிகரைப் பொற்கடகம் ஊரும் !
நீண்டுமலை முட்டதரு நேரெதிராய் நின்றும்
நீர்கசிய வேரிடுக்கில் நின்றதலை ஆடும்
கூண்டிழுத்து மூடிவழி கூதலறச் சிட்டு
கூப்பாடு போடுதலைக் கொக்குயில் கேட்கும்.
பூண்டுசெடிப் பூமுடங்கிப் போனநிசி வேளை
போசனத்துக் கேதுவழி போயலையும் தேனி
தூண்டிலறு பட்டமீனாய்த் துள்ளியோடும் மானும்
தூங்கயிடம் இன்றிதலை தூக்கிவானைப் பார்க்கும்!
ஏரியிடை பாய்தவளை ஈட்டுகின்ற சத்தம்
எங்குமெழப் பொந்தரவம் ஏக்கமுடன் தேடி
ஈரிழையாய் நாக்குநுனி எச்சிதனைத் தூவி
எங்கதுவோ என்றலைய! ஈசலுண்டு மஞ்ஞை
கூரலகு தீட்டுதலைக் கண்டுதெறித் தோடிக்
குற்றுயிராய் மூச்சுவிடும் கோரமுகம் காட்டி
மாரிவரும் கோடைவரும் மாற்றமில்லை காலம்
மன்பதையில் காணவில்லை மானிடத்தின் கோலம் !
அருமை பாவலரே தொடர்ந்து எழுதுங்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜி கண்டிப்பாக எழுதுகிறேன்
நீக்கு