மாண்புமிகு மனித குலத்துக்குள்
மறைபொருளாய் மௌனிக்கப்பட்ட
மனிதாபிமானத் தேடல்களில்
எனக்கான இடைவெளிகளை
நிரப்பியவாறு என் பயணம்
சூழலின் சூழ்நிலைகளை கடந்து செல்கிறது...!
சுவாசிக்கத்தெரிந்த ஜீவனெல்லாம்
மறைமுகமாய் மறந்துகொண்டிருக்கும்
பழமை வாதங்களை
தூசுதட்டி துகிலுரிய வைக்க
நான் முயற்சிக்கவில்லை .....!
அவரவர் தியாகங்களுக்கும்,
தேவைகளுக்கும் தீர்ப்புச்சொல்ல
மனச்சாட்சியே மறைபொதிந்த நீதிமன்றம்
இதில் சாட்சி சொல்லவும்
தகுதி அற்ற உறவுகள் நாம்
ஆதலால்
புத்திசொல்லி பொழுதுகளை
வீணடிக்க விரும்பவில்லை....!
இது எனக்கான பாதை என்பதால்
திட்டமிடலுக்குள் தீப்பிடிக்கும் போதும்
வரட்டு கௌரவங்களை
இறக்கிவிட்டே செல்கிறேன்
இயங்கியல் என் திசைகளை மாற்றலாம்
சேருமிடத்தை நானே தீர்மானித்துக் கொண்டதால்
தூரம் என்னால் துரத்தப்பட்டே நிறுத்தப்படும்..!
அகிம்சை போதிக்க
ஆயிரம் பேர் இருப்பினும்
இன்னும் பாவப்பொதிகளோடு
இறந்துகொண்டிருக்கும்
இதயம் அற்றவர்களின்
நிழல்களை கூட மிதிக்காதீர்கள்.
நாளை நீங்களும் உயிர்களைப் பிழியலாம்...!
இயற்கையோடு வாழப்பழகிய
ஆதிகால மனிதன்
இயந்திரமாய் போன இன்றைய சூழலுக்கு
பொருத்தம் இல்லைத்தான்
இருந்தும்
ஓரளவு மனிதனாய்
வாழ்ந்து மறைந்துவிட்டான்
தவிர்க்கமுடியா தற்காலத்தின்
கூர்ப்பியல் கொள்கைக்குள்
நாகரிகம் வளர்ச்சிகண்டபோது
ஆடையால் மூடி அங்கத்தை மறைத்தான்
ஆத்வாவையும் சேர்த்தே மறைத்தது நவீனம்...!
மூளைக்குள் மூலதனம்
அடர்த்தியாய் அகலக்கால் பதிக்க
கண்டுபிடிப்பும், கணனியுகமும்
காற்றுக்கும் விலையை கொடுத்தது
ஏறிக்கொண்டான் எல்லாவற்றிலும்
இறக்கிவிட்டான் விழுமியங்களை.....!
இறக்கப்பட்டவைகளை
பொறுக்கிக்கொண்டே
எனது பயணம் தொடர்கிறது......!
பிரியமுடன் சீராளன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக