நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 22 ஜனவரி, 2014

ளகர ழகர வேறுபாடுகள்


நண்பர்களே, ளகர ழகர வேறுபாடுகள் என்ன என்பதையறிந்து இயன்ற வரையில் பிழையின்றி எழுத முயற்சி செய்வோம்.

அளம் = உப்பு
அழம் = பிணம்

அளகு = பெண்பறவை, கோழி
அழகு = அலங்காரம்

அளி = தா, அருள், கா, குழை, அருள், வண்டு, சேறு
அழி = கெடு

அளை = கல, துழாவு, குழை, வளை, தயிர், வயிற்றிளைச்சல்-சீதபேதி
அழை = கூப்பிடு, பெயரிட்டு வழங்கு

ஆளம் = ஒரு விகுதி
ஆழம் = ஆழம் (depth)

ஆளி = அரசன், அரசி, சிங்கம், யாளி, ஒரு விகுதி
ஆழி = கடல், மோதிரம், சக்கரம்


ஆள் = புழங்கு, பயன்படுத்து, அரசு செய், அதிகாரம் செலுத்து, 
             (a person)
ஆழ் = அமிழ், மூழ்கு, ஆழமாகு

இள = மெலி, மென்மையாகு, மெல்லிய (young)
இழ = இழ(த்தல்) (to lose)

இளி = தாழ், பல்லைக்காட்டு, தாழ்வு, ஒரு சுரம்
இழி = தாழ், இறங்கு, பழி

இளை = மெலி, களை, மூச்சு, வாங்கு, காவற்காடு
இழை = தேய், செய், நூலிடு, நகை, நூல்

உளவு = வேவு
உழவு = உழுதல், பயிர்த்தொழில், வருத்தம், முயற்சி

உளி = ஓர் ஆயுதம், இடம், 7-ம் வேற்றுமை உருபு
உழி = இடம், 7-ம் வேற்றுமை உருபு 

உளு = புழுவால் அரிக்கப்படு, புழு
உழு = உழு(தல்) (to plough)

உளை = நோகு, சேறு
உழை = வருந்தி வேலை செய், இடம், மான், 7-ம் வேற்றுமை உருபு

ஒளி = மறை, வெளிச்சம், புகழ், அறிவு
ஒழி = அழி, நீக்கு

களி = மகிழ், கட்குடி, மகிழ்ச்சி, குடியன், செருக்கு, மதம், கிண்டியவுணவு
கழி = நீக்கு, நீராய் வெளிக்குப் போ, கோல், கடற்கால்வாய், மிகுந்த

களை = இளை, வலியிழ, நீக்கு, முகவழகு, வேற்றுப்பயிர், அலகு (சங்கீதம்)
கழை = கோல், கரும்பு, மூங்கில்

காளி = ஒரு பெண் தெய்வம், பேய்த்தலைவி
காழி = சீகாழி

சீகாளி = திருக்காளி
சீகாழி = ஓர் ஊர்

காள் = நாயொலி
காழ் = முற்று, வைரம், விதை, முத்து, முத்துகாலை, பகை

கிளவி = சொல்
கிழவி = முதியவள்

கிளி = ஒரு பறவை
கிழி = கிழி(த்தல்), துணி, பணமுடிச்சு, படம்

கீள் = கிழி, தோண்டு
கீழ் = கீழ் (down, under), தாழ்ந்த, இழிவான, கீழேயுள்ள, கிழக்கத்திய

குளவி = காட்டுமல்லிகை, தேனீ
குழவி = குழந்தை, அரைக்கும் கல்லுருளை

குளம்பு = (குதிரை, மாடு முதலிய) விலங்கின் பாதம்
குழம்பு = கல, மயங்கு, திண்ணிய சாறு, சேறு

குளி = முழுகு
குழி = பள்ளம் விழு, பள்ளாமாக்கு, பள்ளம், கிடங்கு, துவாரம்

குளுகுளு = குளிர்ச்சிக்குறிப்பு, குழைவுக் குறிப்பு
கூழம் = எள்

கூளி = பேய்
கூழி = குள்ளப்பசு

கூளம் = விலங்கின் உணவு, கீரையிலுள்ள தூசி
கூழம் = எள்

கேள் = செவி கொடு, விசாரி, வினவும் கேட்டறி, இனம்
கேழ் = பொருந்து, நிறம்

கொளு = பொருந்து(clue)
கொழு = கொழுப்புவை, செழி

கொளுந்து = ஏரி
கொழுந்து = இள இலை

கோளி = கொள்பவன், பூவாது காய்க்கும் மரம்
கோழி = ஒரு பறவை

சளக்கு = ஓர் ஒலிக்குறிப்பு
சழக்கு = குற்றம்

சளி = குளிர், தடுமம்
சழி = சப்பையாக்கு

சுளி = முகங்கோணு, கோபி
சுழி = வளை, வட்டமிடு, வட்டம், வட்டமயிரொழுங்கு, 
              ஓர் எழுத்து   (பிள்ளையார் சுழி)

சூள் = ஆணை (சபதம்)
சூழ் = ஆராய், நாற்புறமும் வளை, முற்றுகையிடு 

சோளம் = ஒரு தானியம்
சோழம் = ஒரு நாடு

தளை = கட்டு, விலங்கு, ஒரு செய்யுளிலக்கணம்
தழை = செழித்தோங்கு, இலை, குழை

தாளம் = இசைக்காலவறுதி
தாழம் = தாழ்வு

தாளி = குழம்பைத்தாளி, ஒரு வகைப்பனை, கள்ளி 
               (தாளியடித்தல் = பரம்படித்தல்) 
தாழி = பெரும் பானை 

தாள் = நெற்பயிர் முதலியவற்றின் இலை, பாதம், முயற்சி
தாழ் = கீழாகு, இறங்கு, கதவடைகோல்

தெளி = தெளிவாகு, சிதறு, ஐயம் நீங்கு
தெழி = அதட்டு

தோளன் = தோளையுடையவன்
தோழன் = நண்பன்

நாளி = நாய்
நாழி = படி, நாழிகை

நுளை = செம்படவர் குலம்
நுழை = புகு, நாழிகை

பளிச்சு = ஒளிவீச்சுக்குறிப்பு
பழிச்சு = புகழ், வாழ்த்து, துதி

பளு = கனம்
பழு = முதிர், கனி, மஞ்சள் நிறமாகு, ஒளிநிறம்

பாளி = ஒரு பாழை (பாசை)
பாழி = சிறுகுளம், நகர் 

பாளை = மடல்
பாழை = பாசை

பாள் = கம்பி
பாழ் = வீண், அழிவு, வெறுமை

பிளா = ஆட்டொலி
பிழா = இறைகூடை, ஓலைத்தட்டு

பீளை = கண்மலம்
பிழை = துன்பம்

புளுகு = பொய்
புழுகு = புனுகு

பூளை = ஒரு செடி
பூழை = துவாரம், சிறு வாசல்

பொளி = கொத்து, வரப்பு
பொழி = ஊற்று, விரைந்து பேசு, நிரம்பக்கொடு, திரட்டு

முளவு = முள்ளம்பன்றி
முழவு = மத்தளம்

முளை = தோன்று, விதை முளை, கட்டுத்தறி, மூலம்
முழை = குகை

மூள் = மிகு
மூழ் = மூடு

வளமை = செழிப்பு
வழமை = வழக்கம்

வளி = காற்று
வழி = நிரம்பி விழு, பாதை

வளை = கோணலாகு, வட்டமாகு, சூழ், முற்றுகையிடு, துவாரம், 
                முகட்டு , விட்டம் 
வழை = சுரபுன்னை மரம்

வாளா = சும்மா, பேசாமல்
வாழா = வாழ்ந்து, வாழாமல், வாழமாட்டா

வாளி = அம்பு, வளையம், கடகால்
வாழி = வாழ்க

வாளை = ஒரு மீன்
வாழை = ஒரு மரம் / வாழை மரம் 

வாள் = ஒளி, ஓர் ஆயுதம்
வாழ் = உயிரோடிரு, மேன்மையாயிரு

விளவு = விளாமரம்
விழவு = திருவிழா, கொண்டாட்டம்

விளி = கூப்பிடு, முடி, இற, கூப்பிடுதல்
விழி = கண் திற, பார், கண்

விளை = வளர், முதிர், வயல்
விழை = விரும்பு

வேளம் = பகையரச மகளிர் சிறைக்களம்
வேழம் = கரும்பு, மூங்கில், யானை

சில சொற்கள் ளகர, ழகர பேதமின்றி எழுதப்படும். அவையாவன:

இளிவு, இழிவு = நிந்தை

உளறு, உழறு = பிதற்று, நாத்தடுமாறு

குளறு, குழறு = நாத்தடுமாறு

சுளி, சுழி = முகங்கோணு, கோபி

துளாய், துழாய் = துளசி

பவளம், பவழம் 

மங்கலம் என்னும் சொல் மங்களம் என்றும் வழங்கும்.

நன்றி: மு. தேவநேயப்பாவாணர் எழுதிய உரைநடை
இலக்கணமும் கட்டுரை எழுதும் முறையும் என்ற நூலில்
இருந்து தொகுத்து தமிழ் மன்றத்தில் பகிர்ந்திருக்கும்
திரு .பாரதிக்கு மனமார்ந்த நன்றிகள் 

18 கருத்துகள்:

  1. மிக அருமை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள்
      வருகைக்கும் கருத்துக்கும்
      இனிய வாழ்த்து
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  2. நல்லதொரு சிறப்பான தொகுப்பு.... அறிந்து கொள்ள வேண்டியதும் கூட... மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தனபாலன் சார்
      தேடிக்கிடைப்பதை அனைவருடனும்
      பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவே !

      மிக்க நன்றி இனிய வாழ்த்து
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  3. வணக்கம் சீராளா!
    தான் பெற்ற இன்பம் பெறுக இவ வையகம் அப்படித் தானே நன்று நன்று. பலர் விடும் பிழைகள் இல்லையா?
    கவனமாக இருந்தாலும் எனக்கும் அடிக்கடி குழப்பம் வருவதுண்டு.
    மிக்க நன்றி ....! தொடர வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ இனியா !

      ஆம் நான் பெற்ற இன்பம் எல்லோரும் பெறுதலே நலம் !
      தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
      இனிய வாழ்த்து !

      நீக்கு
  4. தங்கைகளின் மனம் அறிந்த தமையன்... :P ... ஹிஹி நல்ல தொகுப்பு அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியா !

      ஆமா ஆமா எல்லோரும் நலம் பெறணும் இல்லையா
      தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
      இனிய வாழ்த்து !

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  6. என்னை போன்றோருக்கு தேவையான பதிவு !
    கர்சரின் பின்னால் நெளிந்து கொண்டே இருக்கும் welcome செய்தி கவனத்தை திசைதிருப்புகிறது இளவலே !
    சற்று கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மைதிலி!
      தங்கள் கருத்தே எல்லோரின் விருப்பம் எனில் அதனை தவிர்த்துக்கொள்கிறேன்

      இனிய வாழ்த்து
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  7. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    பதிலளிநீக்கு
  8. அய்யா,
    வணக்கம். தங்களின் இந்தத்தளத்திற்குத் தற்பொழுதுதான் வருகிறேன்.
    கவிஞரில் இருந்து புலவராய்ப் பரிணமித்திருக்கும் தங்களைக் கண்டு வியக்கிறேன்.
    நிறைய கற்றுக் கொண்டேன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஊமைக்கனவுகள் !

      அறிதலும் அவ்வாறே ஊட்டலும் நல்ல
      நெறியாளன் கொண்டநற் பண்பு !

      நான் அறிந்ததை பகிர்ந்தேன் அவ்வளவே
      புலவன் என்னும் சொல்லுக்கு அருகிலும் நான் வரவில்லை

      மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  9. வணக்கம் !
    நற் பயனை அள்ளித் தர வல்ல மற்றுமொரு தளம் கண்டு
    வியந்தேன் ! மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அம்பாளடியாள் !

      நான் அறிந்ததை பகிர்ந்தேன் அவ்வளவே கற்றுணருங்கள்

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

      நீக்கு
  10. மிகவும் பயனுள்ள பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கலையரசி என் வலைப்பூவிற்கு தங்கள் முதல் வருகயினை வரவேற்கிறேன் !

      அறிந்ததைச் சொல்லி அறியாமை போக்கல்
      பிறந்தார்க்குச் செய்யும் கடன் !

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

      நீக்கு