குறள் வெண்பா !
அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில்
முன்னை முகிழ்த்த மொழி !
நேரிசை சிந்தியல் வெண்பா !
அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்
மன்புகழ் பாடி வளம்சேர்க்க - என்றென்றும்
முன்னின்று காக்கும் மொழி!
இன்னிசைச் சிந்தியல் வெண்பா !
அன்பில் அணைத்தொருகை ஆடை களைந்தொருகை
இன்பக் குளியலுடன் இன்னிசையும் தந்துவிட
அன்னையே ஆர்த்த மொழி !
நேரிசை வெண்பா !
அன்பில் மலரும் அடிநெஞ்சில் தேன்சுரக்கும்
பொன்னின் நிகராய்ப் பொலிந்திருக்கும் - என்னவளின்
கன்னக் குழியின் கவிதை இலக்கணத்தில்
முன்னே இருக்கும் மொழி !
இன்னிசை வெண்பா !
அன்பில் பிறப்பொளிரும் ஆன்ம வலம்மேவும்
சின்னவள் மூச்சென்று செங்காந்தள் பூத்திருக்கும்
புன்னை வனக்குயிலும் பூபாளம் பாடிநிற்கும்
என்னுயிரும் ஏற்ற மொழி !
பஃறொடை வெண்பா!
அன்பில் அகம்நிறையும் ஆயுள் அதிகரிக்கும்
முன்பின் முடிவென்ற மூத்தோரின் - பொன்னுரைகள்
சென்னி புகுந்தளிக்கச் சித்தம் தெளிவடையத்
துன்னார் தவறைத் தொலைவாக்கும் ! ஔடதமாய்
வன்மம் மறைக்கும் மொழி !
இலக்கண விளக்கம்
வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.
அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.
மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்பில் ', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'மொழி ' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.
பிரியமுடன் சீராளன் !