நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 27 பிப்ரவரி, 2019

பாட்டரசர்க்கோர் பாமாலை !



அன்னை மொழிக்கொரு ஆணிவேர் ஆகிப் - பல
.....ஆண்டு களாய்த்தமிழ் அளித்திடும் யோகி!
தன்னை நினைந்தவர் தாகமும் அறிவார் - பாத்
.....தடையற ஊட்டியே தம்நிறை வடைவார்!
என்னை யுமோர்கவி ஆக்கிட வந்தார் - தினம்
.....எதுகை மோனையி லக்கணம் தந்தார்!
முன்னைப் பயனென முகிழ்த்துள உறவர் - பலர்
.....முயற்சியில் கைதரும் முத்தமிழ் மறவர்!

நெய்தல் சிறப்புறும் நிலத்தக வொழுக்கம் - கம்பன்
.....நினைவு சுமந்தவர் கவிதைகள் பழுக்கும்!
உய்யும் வழிதனை உணர்த்தியே நிற்பார் - தமிழ்
.....ஊன்றும் நெறிகளை உயிர்ப்புடன் கற்பார்!
பெய்யும் மழைதனைப் பெற்றிடும் மேகம் - கடல்
.....புகுந்ததை அள்ளியே போக்கிடும் தாகம்!
பொய்கை மலரிதழ் புகுந்திடும் தேனாய் - கவி
.....பொலிந்திடும் பாவலர் பறந்திடும் வானாய்!

மஞ்சரி போட்டுயிர் மன்றத்தில் ஏற்றித் - தமிழ்
.....மகனென வாழ்த்தியே மகிழ்ந்துளம் போற்றி
விஞ்சியே நீர்..தரும் வியன்றமிழ் கற்பேன் - பலர்               
....வியந்திடப் பாக்களை விதைத்துமே நிற்பேன் !
எஞ்சிய காலமும் இயன்றமிழ் பாடக் - கலை
....எழிலென விளங்கிடும் காப்பியம் சூடப்
பஞ்சக ரத்தனைப் பணிந்தசை படிப்பேன் - புகழ்
....பாரதி தாசரைப் பாட்டிலே வடிப்பேன் !

பாவலர் .வீ. சீராளன்
27-02-2019