நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 15 ஜூலை, 2020

தாய்மையின் இலக்கணம் நீயே !நூலினைப் போலொரு சேலை - அதை
நூற்கையில்  மணத்திடும்  பெண்மனச் சோலை
பாலினை ஊட்டிடும் தாயே - உன்
பண்பினைப் பேணிடும்  பச்சிளம் சேயே !

உன்னதம் என்பது தாய்மை  -அதை
உணர்த்தி இருந்தது  உம்பரின் வாய்மை
தன்னலம் பேணிடாள் உன்னால்  - தகை
தாங்கிய மாந்தரைத் தந்துளாய்  தன்னால் !

காலையி ரவென அறியாய்    - உன்
கண்விழி தூங்கிய கணப்பொழு  தறியாய்
வேலைகள் ஆயிர மாயும் - பசி
வேட்கையில்  விம்மிய மழலையில் சாயும் !

நள்ளிய வள்ளலாய் இருப்பாய்  - சுய
நலன்கள் மறந்துடல் நோவிலும் தவிப்பாய்
துள்ளிய மகநுதல் மோந்து - படும் 
துயர்களை வருடியே ! தூவுவாய் சாந்து !

வெட்டிய உறுப்பதன்  வலியும் - பின்
வீறிடும் மகக்குரல் கேட்டதும் நலியும்
கொட்டிய குருதியின் களைப்பு - உன்
கொஞ்சலில் மறைத்திடும் குழைந்தையின் நகைப்பு !

எத்தனை பிறவிகள் எடுத்தும் -நின்
உயிர்மையின் சிறப்பினை உலகமே ! கெடுத்தும்
அத்தனை பிறவிகள் தோறும் - நிறை 
அன்பால்  பெற்றவுன்  அணுக்களே நாறும் !

கவிதையில் பொய்களும் இன்றிப்  - பல
கவிஞரில் கருப்பொருள் தேக்கினாய் நன்றி
பவித்திரம் ஆனவள் உன்னால் - இந்தப்
பாருல கழகுறும் பாரடி தன்னால் !

2 கருத்துகள்: