நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெள்ளி, 9 டிசம்பர், 2022

ஈழமெங்கள் தாய்நாடு




ஈழமெங்கள் தாய்நாடு எம்மவர்க்கும்   சொர்க்கம்

         இயற்கையெழில் கொஞ்சிவரும்  எத்தனையோ நித்தம்  

ஏழைகளும் வாழ்ந்திடவே எருதுகளும் நித்தம் 

         எழில்பொங்கும் வயல்வெளியில்  ஏர்பிடித்து நிற்கும்

வாழைபலா தென்னையெலாம் வழிநெடுகக்  காய்க்கும்

        வளமெல்லாம்  கொண்டமைந்த வண்ணமொளிர் நாட்டில்

வாழ்ந்துவந்த எம்மவர்க்கு வந்ததொரு கேடு

         வக்கிரமாய் எமையழித்து மகிழ்ந்தவனும் பேடு !


மலையழகும் தினையழகும் மங்களமே பாடும்

        மங்கையரின் மனவழகும் மதியழகு சூடும்

சிலையழகு போலங்கே செழித்திருப்பார் என்றும்

        சிட்டுப்போல் எங்கணுமே சிறகடிப்பார் இன்றும்

கலைகளெல்லாம் கற்றேகிக்  கைத்திறனை காட்டிக்

        கனவுகளைக் காட்சிகளை கைப்படவே நெய்வார் 

தலைவாழை இலைபோட்டு  விருந்தளிப்பார் உண்ணத்

        தடையில்லை எவருக்கும்  தாகமறுந் தேக !


பச்சைநிறப்  பசுந்தரைகள்  பட்டாடை போர்த்தப்

         பவனிவரும் பறவைகளும் பார்த்ததனைப் பாடும்

இச்சையுடன் இறங்கிவந்து இரைகளினைத் தேடும்

         இனிமையுடன்  கிசுகிசுத்து  இருக்கைகளில்  கூடும்

அச்சமின்றி அனுதினமும் ஆலங்கிளி பாடும்

         அழகுதனைக்  கண்டுமரை ஆனந்தமாய் ஓடும்

உச்சிமகிழ்ந் திருந்தகுயில் உணர்ச்சியிலே  கூடி

          ஓடிவந்து இசைத்திடுமே உயிர்மொழியில் தோடி !


மந்திகளும் மழையிருட்டில்  மரங்களெல்லாம் தாவும்

         வானரங்கள் கண்டதனை மையலுடன் நாணும்

விந்தையென வண்ணமலர்  விடியுமுன்னே பூக்கும்

          விதவிதமாய்  மணங்கமழ்ந்து வேதனைகள் போக்கும்

அந்திபகல் அரையிருட்டும்  அழகுமான்கள் துள்ளும்

         ஆடுமயில் கூட்டங்களின் அகவலுயிர் அள்ளும்

இந்திரனும் கண்டுவிட்டால் எங்குமவர் செல்லார்

         ஈழநிலம்  சொர்க்கமென்றே இறைவியிடம் சொல்வார் !


 பொங்கிவரும் ஞாயிறொளி  புலர்வதனைக் கண்டு

          பூரித்துப் பார்த்துழவன் புன்முறுவல் பூப்பான்

மங்கிவிட்ட மாலையிலும்  மயங்கியங்கு நிற்பான்

          மறுபடியும் வரும்வரைக்கும் மனதையங்கே வைப்பான்

செங்கதிரின் தலைகவிழும் அழகுண்டு செல்வான்

          சேற்றுநிலம்  ஈன்றவலி சிறுதுயிலில் வெல்வான்

தங்குமிருள் கலைபொழுதில் கரைந்திடவே சேவல்

          தனைமறந்து  விழிதிறப்பான் தென்கிழக்கு நோக்கி !


சொல்லவொரு நாள்போதாச் சொர்க்கபுரி ஈழம்!

          சுடலையதாய் ஆக்கிவிட்டான் சுடுகிறது நாளம்!

வெல்லுமொரு காலமென வெளிநாட்டில் நாளும்!

         வெந்துமடி யும்பொழுதும் வேட்கையது நீளும்!

கல்லுமனப் பாதகரின் காலடியில் துள்ளும்!

        காடையர்கள்  பரம்பரையைக்  காலத்தீ  கொல்லும்!

எல்லையிலாப் பரம்பொருளின் இதயத்தை ஆளும்

        எம்குடியின் மனவலிகள் எதிரிமனை சூழும் !


பாவலர் சீராளன்

புதன், 23 நவம்பர், 2022

மழைக்கால மாற்றங்கள் !

            


கங்குலெழக் காற்றசையக் கார்மழையும் கொட்டக்

       காட்டுநரி ஊழையிலே கானமயில்  ஒடத்

தொங்குவான ரங்குமடி தொட்டுவளர் குட்டி

       தூக்கியெடுத் தோடுகின்ற காட்சியிடை ! அந்தோ !

எங்குமெழில் தந்தவொளித் தாரகைகள் வானை 

       இட்டுநெடு தூரமதாய் ஏகியிருள்  சூழ !    

பொங்குநுரை தீண்டமணற் புட்களிடம் மாறும்.

       போருதவி இன்றிகரைப் பொற்கடகம் ஊரும் !


நீண்டுமலை முட்டதரு நேரெதிராய் நின்றும் 

        நீர்கசிய வேரிடுக்கில் நின்றதலை ஆடும்

கூண்டிழுத்து மூடிவழி கூதலறச் சிட்டு

        கூப்பாடு போடுதலைக் கொக்குயில் கேட்கும்.

பூண்டுசெடிப் பூமுடங்கிப் போனநிசி வேளை

        போசனத்துக் கேதுவழி போயலையும் தேனி

தூண்டிலறு பட்டமீனாய்த் துள்ளியோடும் மானும்

        தூங்கயிடம் இன்றிதலை தூக்கிவானைப் பார்க்கும்!


ஏரியிடை பாய்தவளை ஈட்டுகின்ற சத்தம்

      எங்குமெழப் பொந்தரவம் ஏக்கமுடன் தேடி 

ஈரிழையாய் நாக்குநுனி எச்சிதனைத்  தூவி  

     எங்கதுவோ என்றலைய! ஈசலுண்டு மஞ்ஞை

கூரலகு தீட்டுதலைக் கண்டுதெறித்  தோடிக் 

      குற்றுயிராய் மூச்சுவிடும் கோரமுகம் காட்டி   

மாரிவரும் கோடைவரும் மாற்றமில்லை காலம் 

      மன்பதையில் காணவில்லை மானிடத்தின் கோலம்  ! 



செவ்வாய், 15 நவம்பர், 2022

மரணம் ஒன்றே மருந்தாகும் !

 



மனிதா உன்றன் நிலையென்ன - நீ 

மறுக்கும் அன்பின் விலையென்ன ?


மரத்துப் போகும் மனக்கூடு -அதை 

மாற்றிக் கொடுக்கும் எவ்வேடு ?

மாற்றான் வீட்டில் இழப்பைக் கண்டால் 

மகிழ்வைச் சொல்லத் தெருக்கூடும் - இதை  

மந்திக்  குணமோ விடக்கூடும் !


மரணம் ஒன்றே மருந்தாகும் - வந்த

மயக்கம் போக்கும் விருந்தாகும்

மனிதம்  போற்ற  வாழ்வோர்க் கிங்கே

மறதிக் குணமே சிறப்பாகும் -உயிர் 

மடிந்தும் மறையாப்  பிறப்பாகும்?

 

பெருமை கொள்வதில் பயனில்லை - மதி 

பெருத்தால் மட்டும்  சிறப்பில்லை 

பிழைப்புக் காகப் பேதம் வளர்க்கும்  

பிறவிக் குணமும் இழிவாகும்  - அதைப்

பிரித்தெறி பாவப்  பழிபோகும் !


இருமைப் பட்டுப் போகின்றோம்! - நம் 

இயல்பை மறந்தே வேகின்றோம்! 

இல்லை எனுஞ்சொல் இல்லா திருப்பின் 

இரப்பவர் இங்கே இல்லையடா - மனம் 

இருக்கும் இடமே முல்லையடா !


சிந்தனை என்பதும் ஓராற்றல்! - அதைச்

சிதைப்பவர்க் கில்லை பேராற்றல் !

சித்தம் நிறைக்கும் செயல்கள் செய்தால் 

சிறப்புத் தானாய் வந்துவிடும் - அது 

சினத்தின் அரும்பைக் கொய்துவிடும் ! 


நிந்தனை என்பது பெரும்பாவம்-அதை

நிறுத்திடக் கலையும் உன்சாபம்!

நியதிக ளாலே நினைவைச் செதுக்கு

நிறைவாய் வாழ வழிசெய்யும் - அல்லால்

நினைவும் ஒருநாள் உயிர்கொய்யும்!


செல்வச் செழிப்பில் ஆடாதே- அதன்

செருக்கைத் தலையில் சூடாதே !

சிக்கனப் படுத்திச் சேர்த்தும் பயனிலை

சிதையுடன் சேர்ந்தது வருவதில்லை- சுடும்

செந்தணல் அமைதியும் தருவதில்லை!


சொல்லைச் செயலாய் உருவாக்கு -உன் 

சொப்பனம்  யாவையும் கருவாக்கு !

சோகம் வாழ்வில் தொடர்கதை இல்லை 

சுறுசுறுப் பாக நடந்திடுவோம் -பகை 

சுற்றும் இடத்தைக் கடந்திடுவோம் ! 


பாவலர் சீராளன்