மனிதா உன்றன் நிலையென்ன - நீ
மறுக்கும் அன்பின் விலையென்ன ?
மரத்துப் போகும் மனக்கூடு -அதை
மாற்றிக் கொடுக்கும் எவ்வேடு ?
மாற்றான் வீட்டில் இழப்பைக் கண்டால்
மகிழ்வைச் சொல்லத் தெருக்கூடும் - இதை
மந்திக் குணமோ விடக்கூடும் !
மரணம் ஒன்றே மருந்தாகும் - வந்த
மயக்கம் போக்கும் விருந்தாகும்
மனிதம் போற்ற வாழ்வோர்க் கிங்கே
மறதிக் குணமே சிறப்பாகும் -உயிர்
மடிந்தும் மறையாப் பிறப்பாகும்?
பெருமை கொள்வதில் பயனில்லை - மதி
பெருத்தால் மட்டும் சிறப்பில்லை
பிழைப்புக் காகப் பேதம் வளர்க்கும்
பிறவிக் குணமும் இழிவாகும் - அதைப்
பிரித்தெறி பாவப் பழிபோகும் !
இருமைப் பட்டுப் போகின்றோம்! - நம்
இயல்பை மறந்தே வேகின்றோம்!
இல்லை எனுஞ்சொல் இல்லா திருப்பின்
இரப்பவர் இங்கே இல்லையடா - மனம்
இருக்கும் இடமே முல்லையடா !
சிந்தனை என்பதும் ஓராற்றல்! - அதைச்
சிதைப்பவர்க் கில்லை பேராற்றல் !
சித்தம் நிறைக்கும் செயல்கள் செய்தால்
சிறப்புத் தானாய் வந்துவிடும் - அது
சினத்தின் அரும்பைக் கொய்துவிடும் !
நிந்தனை என்பது பெரும்பாவம்-அதை
நிறுத்திடக் கலையும் உன்சாபம்!
நியதிக ளாலே நினைவைச் செதுக்கு
நிறைவாய் வாழ வழிசெய்யும் - அல்லால்
நினைவும் ஒருநாள் உயிர்கொய்யும்!
செல்வச் செழிப்பில் ஆடாதே- அதன்
செருக்கைத் தலையில் சூடாதே !
சிக்கனப் படுத்திச் சேர்த்தும் பயனிலை
சிதையுடன் சேர்ந்தது வருவதில்லை- சுடும்
செந்தணல் அமைதியும் தருவதில்லை!
சொல்லைச் செயலாய் உருவாக்கு -உன்
சொப்பனம் யாவையும் கருவாக்கு !
சோகம் வாழ்வில் தொடர்கதை இல்லை
சுறுசுறுப் பாக நடந்திடுவோம் -பகை
சுற்றும் இடத்தைக் கடந்திடுவோம் !
//மாற்றான் வீட்டில் இழப்பைக் கண்டால்
பதிலளிநீக்குமகிழ்வைச் சொல்லத் தெருக்கூடும்//
உண்மை நிலைப்பாடு கவிஞரே....
வணக்கம் ஜி !
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்