ஈழமெங்கள் தாய்நாடு எம்மவர்க்கும் சொர்க்கம்
இயற்கையெழில் கொஞ்சிவரும் எத்தனையோ நித்தம்
ஏழைகளும் வாழ்ந்திடவே எருதுகளும் நித்தம்
எழில்பொங்கும் வயல்வெளியில் ஏர்பிடித்து நிற்கும்
வாழைபலா தென்னையெலாம் வழிநெடுகக் காய்க்கும்
வளமெல்லாம் கொண்டமைந்த வண்ணமொளிர் நாட்டில்
வாழ்ந்துவந்த எம்மவர்க்கு வந்ததொரு கேடு
வக்கிரமாய் எமையழித்து மகிழ்ந்தவனும் பேடு !
மலையழகும் தினையழகும் மங்களமே பாடும்
மங்கையரின் மனவழகும் மதியழகு சூடும்
சிலையழகு போலங்கே செழித்திருப்பார் என்றும்
சிட்டுப்போல் எங்கணுமே சிறகடிப்பார் இன்றும்
கலைகளெல்லாம் கற்றேகிக் கைத்திறனை காட்டிக்
கனவுகளைக் காட்சிகளை கைப்படவே நெய்வார்
தலைவாழை இலைபோட்டு விருந்தளிப்பார் உண்ணத்
தடையில்லை எவருக்கும் தாகமறுந் தேக !
பச்சைநிறப் பசுந்தரைகள் பட்டாடை போர்த்தப்
பவனிவரும் பறவைகளும் பார்த்ததனைப் பாடும்
இச்சையுடன் இறங்கிவந்து இரைகளினைத் தேடும்
இனிமையுடன் கிசுகிசுத்து இருக்கைகளில் கூடும்
அச்சமின்றி அனுதினமும் ஆலங்கிளி பாடும்
அழகுதனைக் கண்டுமரை ஆனந்தமாய் ஓடும்
உச்சிமகிழ்ந் திருந்தகுயில் உணர்ச்சியிலே கூடி
ஓடிவந்து இசைத்திடுமே உயிர்மொழியில் தோடி !
மந்திகளும் மழையிருட்டில் மரங்களெல்லாம் தாவும்
வானரங்கள் கண்டதனை மையலுடன் நாணும்
விந்தையென வண்ணமலர் விடியுமுன்னே பூக்கும்
விதவிதமாய் மணங்கமழ்ந்து வேதனைகள் போக்கும்
அந்திபகல் அரையிருட்டும் அழகுமான்கள் துள்ளும்
ஆடுமயில் கூட்டங்களின் அகவலுயிர் அள்ளும்
இந்திரனும் கண்டுவிட்டால் எங்குமவர் செல்லார்
ஈழநிலம் சொர்க்கமென்றே இறைவியிடம் சொல்வார் !
பொங்கிவரும் ஞாயிறொளி புலர்வதனைக் கண்டு
பூரித்துப் பார்த்துழவன் புன்முறுவல் பூப்பான்
மங்கிவிட்ட மாலையிலும் மயங்கியங்கு நிற்பான்
மறுபடியும் வரும்வரைக்கும் மனதையங்கே வைப்பான்
செங்கதிரின் தலைகவிழும் அழகுண்டு செல்வான்
சேற்றுநிலம் ஈன்றவலி சிறுதுயிலில் வெல்வான்
தங்குமிருள் கலைபொழுதில் கரைந்திடவே சேவல்
தனைமறந்து விழிதிறப்பான் தென்கிழக்கு நோக்கி !
சொல்லவொரு நாள்போதாச் சொர்க்கபுரி ஈழம்!
சுடலையதாய் ஆக்கிவிட்டான் சுடுகிறது நாளம்!
வெல்லுமொரு காலமென வெளிநாட்டில் நாளும்!
வெந்துமடி யும்பொழுதும் வேட்கையது நீளும்!
கல்லுமனப் பாதகரின் காலடியில் துள்ளும்!
காடையர்கள் பரம்பரையைக் காலத்தீ கொல்லும்!
எல்லையிலாப் பரம்பொருளின் இதயத்தை ஆளும்
எம்குடியின் மனவலிகள் எதிரிமனை சூழும் !
பாவலர் சீராளன்
//எம்குடியின் மனவலிகள் எதிரிமனை சூழும்//
பதிலளிநீக்குமிகவும் ஆழமான வரிகள் கவிஞரே